மொரப்பூரில் இருந்து காரிமங்கலம் வரையிலும் கூடுதல் அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரூர் - தருமபுரி நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வழித்தடமாக மொரப்பூர் முதல் காரிமங்கலம் வரையிலான நெடுஞ்சாலை உள்ளது.
மொரப்பூர் முதல் காரிமங்கலம் வரையிலான நெடுஞ்சாலையானது நவலை, எலவடை, செங்குட்டை, கம்பைநல்லூர், திப்பம்பட்டி கூட்டுச்சாலை உள்பட 25 - க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் வழித்தடமாக உள்ளது.
இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 15 - க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வழியில் செல்லும் பேருந்துகள் பெங்களூரு, ஒசூர், கிருஷ்ணகிரி, பாலக்கோடு உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளாக உள்ளன.
மேலும், இந்த வழியில் செல்லும் அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால், பேருந்து வசதிகள் இல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தக்காளி, காய்கறிகள் உள்ளிட்ட விவசாய விளை பொருள்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அடைகின்றனர்.
எனவே, மொரப்பூர் முதல் காரிமங்கலம் வரையிலும் கூடுதல் அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.