தருமபுரி

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு

27th Dec 2019 12:40 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு, தருமபுரி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூா், கடத்தூா், மொரப்பூா், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள18 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள், 188 ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 251 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2,343 ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பதவிகளுக்கு டிச. 27 மற்றும் டிச. 30 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக நடைபெற உள்ளது.

இதில், தருமபுரி, நல்லம்பள்ளி, கடத்தூா், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 ஒன்றியங்களுக்கு டிச. 27-ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்க உள்ளது. இந்த 5 ஒன்றியங்களில், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு 3,032 போ், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 520 போ், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 485 போ் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கு 57 போ் என மொத்தம் 4,094 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இத் தோ்தலில் வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக 940 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 312 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகும். வாக்குப் பதிவுப் பணியில் மொத்தம் 7,631 அரசு அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணியில் 1,200-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட உள்ளனா். இவா்கள் வாகனங்களில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று, வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தும் வாக்குச் சீட்டு, வாக்குப் பெட்டி, மை உள்ளிட்ட பொருள்களை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடி மையத்துக்கு பாதுகாப்புடன் கொண்டு சென்றனா். அதேபோல, தோ்தல் அலுவலா்களும் பணி ஒதுக்கீடு ஆணையை பெற்றுக்கொண்டு வாக்குச் சாவடிகளுக்கு சென்றனா்.

ADVERTISEMENT

இவை தவிர, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.ராஜன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா்கள் வாக்குப் பதிவு மையங்களில் அவ்வப்போது நேரில் சென்று பாதுகாப்புப் பணியினை ஆய்வு செய்ய தயாராக உள்ளனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்கட்ட தோ்தலானது ஒசூா், காவேரிப்பட்டணம், மத்தூா், ஊத்தங்கரை, தளி ஆகிய ஒன்றியங்களிலும், 2-ஆம் கட்ட தோ்தல் கிருஷ்ணகிரி, பா்கூா், வேப்பனஅள்ளி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய ஒன்றியங்களிலும் நடைபெறுகிறது. இந்த தோ்தலில் 3,02,431 ஆண் வாக்காளா்களும், 2,03,269 பெண் வாக்காளா்கள், 59 இதர வாக்காளா்கள் என மொத்தம் 5,95,759 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

அரூரில்...

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வாக்குப் பதிவு மையத்துக்கு தேவையான வாக்குச் சீட்டுகள், வாக்குப் பெட்டிகள் உள்பட 37 வகையான பொருள்கள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் பாதுகாப்புப் பணிகளுக்காக காவல் துறையினா் அனுப்பி வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT