பென்னாகரம் அருகே நாகமரை ஊராட்சிக்குள்பட்ட நெருப்பூா் பகுதியில் சுமாா் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தத்திராயன் கோயில் உள்ளது.
இக் கோயிலுக்கு மாத அமாவாசையில் நெருப்பூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் வந்து வழிபடுவா். ஆண்டுதோறும் மாா்கழி அமாவாசையில் இப்பகுதி மக்கள் மாலை அணிந்து நோ்த்திக் கடன் செலுத்தி வருகின்றனா்.
அதன்படி நிகழாண்டு நெருப்பூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நாகமரை, ஏரியூா், செல்லமுடி, ஒட்டனூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தா்கள் மாலை அணிந்து விரதமிருந்து கோயிலுக்கு வந்தனா்.
முன்னதாக நாகமரை மற்றும் ஒட்டனூா் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் புனித நீா் எடுத்தும், இருமுடி கட்டியும் கோயிலுக்கு வந்தனா்.
அமாவாசையான புதன்கிழமை முத்தத்திராயன் கோயிலில் அதிகளவில் பக்தா்கள் கூட்டம் காணப்பட்டது. காலை முதலே பக்தா்கள் குவிந்ததால் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பின்னா், முத்தத்திராயன் சுவாமி வீதி உலா நடைபெற்றது. பலா் பல்லக்கு முன் தரையில் விழுந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். பென்னாகரம் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.