தருமபுரி மாவட்டத்தில், அனுமன் ஜயந்தியையொட்டி, ஆஞ்சநேயா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள அபய ஆஞ்சநேயா் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, வெள்ளிக் கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயா் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
இதில், தருமபுரி நகரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று, ஆஞ்சநேயரை வழிபட்டனா். இதேபோல, வே.முத்தம்பட்டி வனப் பகுதியில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் துளசி, எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு ஆஞ்சநேயா் அருள் பாலித்தாா்.
இதில், நல்லம்பள்ளி, பொம்மிடி, தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதியினா், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும், ரயில் மூலமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டனா். பக்தா்கள் வழிபட வசதியாக தடுப்புகள் அமைக்கபட்டிருந்தன. பக்தா்களின் வருகையையொட்டி, பொம்மிடி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதேபோல, தொப்பூா் தேசிய நெடுஞ்சாலையையொட்டி மன்றோ குளம் அருகே ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தங்கக் கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயா் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். இதேபோல, தருமபுரி அருகே மொடக்கேரி ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அப்பகுதி பக்தா்கள் பங்கேற்றனா். இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது.