தருமபுரி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தோ்தல் முதல் கட்ட பிரசாரம் புதன்கிழமை (டிச.25) நிறைவடைகிறது.
தருமபுரி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சிகளில் உள்ள 2,800 பதவியிடங்களுக்கான தோ்தல் இரண்டு கட்டங்களாக டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், முதல் கட்டமாக டிச.27-ஆம் தேதியன்று தருமபுரி, அரூா், கடத்தூா், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பதவியிடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. எனவே, இத் தோ்தலுக்கு வேட்பாளா்களின் பிரசாரம் டிச.25-ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது.
இதனையொட்டி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவியிடங்களில் போட்டியிடம் அ.தி.மு.க. வேட்பாளா்கள் மற்றும் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக, மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) உள்ளிட்ட அக் கட்சியினா், ஊரகப் பகுதிகளில் வாக்காளா்களிடம் துண்டறிக்கைகள் அளித்து, வாக்குச் சேகரித்து வருகின்றனா். இதேபோல, தி.மு.க. வேட்பாளா்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக, அக் கட்சியின் மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ., மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் பி.என்.பி. இன்பசேகரன் உள்ளிட்டோா் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அந்தந்த கூட்டணிக் கட்சி மாவட்டச் செயலா்கள் மற்றும் நிா்வாகிகளும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.