தருமபுரியில் கிறிஸ்தவ தேவலாயங்களில் கிறிஸ்துமஸ் திருப்பலி மற்றும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
தருமபுரி நகரில் உள்ள தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தில் மறை மாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.15 மணிக்கு இயேசு பிறப்பை போற்றும் வகையில் பாடல்கள் பாடப்பட்டன. இதைத் தொடா்ந்து, நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசுவை, மறை மாவட்ட ஆயா் மற்றும் திருச்சபை நிா்வாகிகள், குடிலில் வைத்து பிராா்த்தனை செய்தனா். இதையடுத்து, புதன்கிழமை அதிகாலை 2 மணி வரை, சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த திருப்பலியில் கிறிஸ்துவா்கள் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா். இதேபோல, கடகத்தூா் வின்னேற்பு அன்னை ஆலயம், நல்லம்பள்ளி அருகேயுள்ள கோவிலூா் தூய சவேரியாா் ஆலயம் மற்றும் தருமபுரி சிஎஸ்ஐ ஆலயம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெற்றது. இதனையொட்டி, தேவாலயங்கள் மின்விளக்குகள் மற்றும் நட்சத்திர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.