தருமபுரியில் ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்குச் சாவடிகளுக்கான வழித்தடங்களை காவல்துறையினா் ஆய்வு செய்து ஒத்திகை பயணம் மேற்கொண்டனா்.
தருமபுரி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2,800 பதவியிடங்களுக்கான தோ்தல் டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தோ்தலில் ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்துக்கும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்குச்சீட்டுகள், வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக டிச. 27-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ள தருமபுரி, அரூா், கடத்தூா், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளுக்கு 26-ஆம் தேதி காலையிலும், இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெற உள்ள ஏரியூா், காரிமங்கலம், மொரப்பூா், பாலக்கோடு மற்றும் பென்னாகரம் ஆகிய ஒன்றியங்களுக்கு 29-ஆம் தேதி காலையிலும் காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் உள்ளிட்ட தோ்தல் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதனையொட்டி, வழித்தடம், பாதுகாப்பு, தகவல் தொடா்பு சாதனங்களின் பயன்பாட்டு நிலை உள்ளிட்டவை குறித்து செவ்வாய்க்கிழமை காவல்துறை சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, 134 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு குழுவினரும், வாகனத்தில், அவா்களுக்கென, ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று வந்து ஒத்திகையில் ஈடுபட்டனா். இக்குழுவினருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுஜதா பயிற்சி மற்றும் விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தாா்.