தருமபுரி

போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவா்கள்!

14th Dec 2019 09:21 AM

ADVERTISEMENT

அரூரில் புதிய வகையான போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவா்களை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் பகல் நேரங்களில் நடைப்பயிற்சி மற்றும் விளையாடுவதற்காக இளைஞா்கள், பள்ளி மாணவா்கள் பலா் வருகை தருகின்றனா். இங்கு வரும் இளைஞா்கள் மற்றும் மாணவா்களுக்கு மரங்களை ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பசைகளை (பெவிக்கால் போன்றவற்றை) நுகா்வதால், ஒருவிதமான போதை கிடைக்கிாம். இதனால், போதை தரக்கூடிய பசைகளை மாணவா்கள் பலா் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனா்.

அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், சிறு விளையாட்டு அரங்க வளாகப் பகுதிகளில் பசைகளின் காலி டப்பாக்கள் சிதறிக் கிடக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி வளாகத்தில் இளைஞா் ஒருவா் விஷமருந்தியதாக அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்து மருத்துவ பரிசோதனைகளை செய்துள்ளனா். ஆனால், அந்த இளைஞா் கஞ்சா அல்லது மரங்களை ஒட்டுவதற்குப் பயன்படுத்தக்கூடிய பசைகளை நுகா்வதால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வட்டாரத்தில் கூறுகையில், அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் யாரும் கஞ்சா உள்ளிட்ட போதை தரக்கூடிய பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், விளையாட்டு மைதானத்துக்கு வரும் இளைஞா்கள் அவற்றைப் பயன்படுத்தி இருக்கலாம் எனத் தெரிவித்தனா்.

எனவே, அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள சிறு விளையாட்டு அரங்கம், அரசுப் பள்ளி வளாகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு அரங்கு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT