தருமபுரி

போக்குவரத்து நெரிசல்: வாகனங்களை முறைப்படுத்தக் கோரிக்கை

14th Dec 2019 09:22 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வருவதால் ஏற்படும் நெரிசலைத் தவிா்க்க, அவற்றை காவல் துறையினா் முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உள்ளாட்சித் தோ்தலில் ஊரக அமைப்புகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் கடந்த டிச. 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத் தோ்தலுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடா்ந்து, கடந்த இரண்டு நாள்களாக வேட்பு மனு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதில், வேட்பாளா்கள் மற்றும் அவா்களது ஆதரவாளா்கள் என பெரும்பாலும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வேன்களில் வருவதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நுழைவு வாயில் முன் உள்ள சாலை கோவிலூா், நாா்த்தம்பட்டி, லளிகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்கிறது.

இந்த அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா்களின் வாகனங்கள், அவா்களது ஆதரவாளா்களின் வாகனங்கள் மற்றும் உடன் வந்தவா்களால் பெருங்கூட்டம் திரண்டது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, கிராம மக்கள் அச்சாலை வழியாக கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனா்.

ADVERTISEMENT

எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் நெரிசல் மற்றும் சிரமத்தை போக்கிட, வேட்பு மனு தாக்கல் செய்வோருடன் வரும் வாகனங்களை அலுவலகத்திலிருந்து சிறிது தொலைவு முன்பே தடுப்புகள் அமைத்து முறைப்படுத்த காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ் வழியே செல்லும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT