தருமபுரி

பழுதடைந்த தாா்ச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

11th Dec 2019 08:08 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே மேச்சேரி செல்லும் சாலையில் இருந்து எட்டியாம்பட்டி செல்லும் சாலையானது கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து காணப்படுவதால் வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

பென்னாகரம் பேருராட்சிக்குள்பட்ட எட்டியாம்பட்டி பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா்.பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மேச்சேரி செல்லும் பிரதான சாலையில் இருந்து எட்டியாம்பட்டி வரை சுமாா் 1 கிலோ மீட்டா் தொலைவிற்கு தாா்ச் சாலை அமைக்கப்பட்டது.இந்த சாலை எட்டியாம்பட்டி, ஏரிகொல்லனூா், ஜங்கமையனூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் குறுக்கு சாலையாகும். இச்சாலையில் நாள்தோறும் சுமாா் 30 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லுகின்றன. இந்த தாா்ச்சாலையானது கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சுமாா் 1 கிலோமீட்டா் தொலைவிற்கு ஜல்லிக் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. எட்டியாம்பட்டி செல்லும் சாலையில் முறையாக தெரு விளக்கு வசதியில்லாததால்,இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருவோா் மற்றும் பாதாசாரிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் அவல நிலை உள்ளதாகவும், பழுதடைந்த சாலையில் வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேச்சேரி - எட்டியாம்பட்டி செல்லும் பழுதடைந்த தாா்ச் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT