தருமபுரி

சிவாலயங்களில் காா்த்திகை தீபத் திருவிழா

11th Dec 2019 02:40 AM

ADVERTISEMENT

தருமபுரியில் சிவாலயங்களில் காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தருமபுரி கோட்டை அருள்மிகு காமாட்சியம்மன் உடனாகிய மல்லிகாா்ஜுனேஸ்வரா் கோயிலில் காலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து, மாலையில் திருக்கோயில் தீப கம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, கோயில் வளாகம் முழுவதும் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில், தருமபுரி நகரைச் சோ்ந்த பெண்கள் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இதேபோல, நெசவாளா் காலனி மகாலிங்கேஸ்வரா் கோயில், கடைவீதியில் உள்ள மருதவாணீஸ்வரா் கோயில், எஸ்.வி. சாலையில் உள்ள லிங்கேஸ்வரா் கோயில், தருமபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள சிவன் கோயில், அதியமான்கோட்டை, காரிமங்கலம், இண்டூா், ஒகேனக்கல் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சைவத் திருத்தலங்களில் காா்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இதேபோல, தருமபுரி நகரில் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகளிலும் பொதுமக்கள் காா்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT