தருமபுரி

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடனுதவி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

29th Aug 2019 08:36 AM

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் நிகழாண்டில் கடனுதவி பெற, இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்துடன் அவர்களின் சொந்த ஊரிலேயே குறு, சிறு உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் தொடங்க வழியேற்படுத்த வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். உற்பத்தித் தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.3 லட்சமும், வியாபாரத் தொழில் திட்டங்களுக்கு ரூ.1 லட்சமும் வங்கிக் கடனாக வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை) மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயத்துடன் நேரடியான தொடர்புடைய இனங்களுக்கு இத்திட்டத்தில் கடனுதவி பெற இயலாது. குறைந்த பட்சம் 18 வயது நிரம்பிய பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35, சிறப்புப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.1,50,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், விண்ணப்பதாரரோ, அவர்களின் குடும்பத்தினரோ எந்த ஒரு வங்கியிலும் தவனைத் தவறிய கடன்தாரராக இருத்தல் கூடாது. மேலும், ஏற்கெனவே வேறு துறை மூலமாகவும் அரசு மானியத்துடன் கூடிய தொழில் கடன் திட்டத்தின் பயனாளிகள், இத்திட்டத்தின்கீழ் கடன் பெறத் தகுதியற்றவராவர்.
தொழில்முனைவோரின் பங்களிப்பாக திட்ட முதலீட்டில் 10 சதவீத தொகையினை பொதுப் பிரிவினரும், 5 சதவீத தொகையை ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் வங்கியில் செலுத்த வேண்டும். தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர், https://www.msmeonline.tn.gov.in/uyegp என்கிற இணையதளம் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், அதில் இணைக்கப்பட வேண்டிய புகைப்படத்துடன் கூடிய ஆவண நகல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின் பதிவிறக்கம் செய்யப்பட்ட இரு நகல்களை அவ் அலுவலகத்தில் 7 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, தருமபுரி - 636 705. 04342 231081,230892 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT