பொ.துறிஞ்சிப்பட்டி முதல் தாளநத்தம் வரையிலான தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.துறிஞ்சிப்பட்டி முதல் தாளநத்தம் வரையிலான தார்ச் சாலை 10 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்த சாலையை பொம்மிடி, பொ.துறிஞ்சிப்பட்டி, குருபரஹள்ளி, வேப்பிலைப்பட்டி, தாளநத்தம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பொ.துறிஞ்சிப்பட்டி முதல் தாளநத்தம் வரையிலான தார்ச்சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது.
இதனால், இந்த சாலையில் செல்லும் விவசாயிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் நாள்தோறும் பல்வேறு சிரமங்களை அடைகின்றனர்.
எனவே, பொ.துறிஞ்சிப்பட்டி முதல் தாளநத்தம் வரையிலான தார்ச் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.