தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், கலந்தாய்வு அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், செவ்வாய்க்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில், தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி அரசு வட்டார மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் என மாவட்டத்தில் மொத்தமுள்ள 380 மருத்துவர்களில் 100 - க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இருப்பினும், பணிக்கு வந்த மருத்துவர்களை கொண்டு, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வந்தவர்கள் மட்டும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு முடிந்த அரசு மருத்துவர்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்த வேண்டும். பணியிடங்களை மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கைக்கு அல்லாமல் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கொண்டு நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னையில் கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர், பர்கூர், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, மத்தூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 250-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் போராட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளுக்கான சிகிச்சை பாதிக்கப்பட்டது. அவசர சிகிச்சை வழக்கம்போல் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர். மருத்துவர்கள் ராமநாதன், சதீஷ், கோபி உள்ளிட்டோர் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்.