தருமபுரி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக, மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக ஆங்காங்கே பரவலாக சிறுவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தருமபுரி நகரத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெண்ணாம்பட்டி, கொல்லஅள்ளி அருகேயுள்ள மொடக்கேரி, தொன்னையன்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளிலிலும், பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக கடந்த சில நாள்களாக அனைத்து வயதினரும், இக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, காய்ச்சலுடன், கை, கால் வலி, மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுவதாகப் பாதிப்புக்குள்ளானோர் தெரிவிக்கின்றனர். அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை காய்ச்சல் வேகமாக பாதித்து வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட 5 வட்டார மருத்துவமனைகள் மற்றும் தருமபுரி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சிலர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகப் பாதிப்புக்குள்ளானோர் தெரிவிக்கின்றனர். அதேபோல, தருமபுரி நகரில் தனியார் குழந்தைகள் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக புறநோயாளிகளாக சிகிச்சைப்பெறுவோர் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் தற்போது காய்ச்சல் பாதிப்புக்காக சுமார் 70 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், மூவருக்கு தீவிர காய்ச்சல் பாதிப் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இவர்களை கண்காணித்து மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உள்நோயாளிகளாக இருப்போருக்கு டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரியவரவில்லை எனவும், இவை, சாதாரணமாக குளிர் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
இத்தகைய பாதிப்புகளைத் தடுக்க, மாவட்டத்தில், கிராமங்கள் தோறும் காய்ச்சல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குழுக்கள் அமைத்து சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்துவதோடு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு குறித்து போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொள்ள வேண்டும். மேலும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் கிராமங்களில் மருத்துவக் குழுக்கள் அமைத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) ஆஷா பெரிடிரிக் கூறியது: தருமபுரி மாவட்டத்தில் உள்ள வட்டார அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்கு எப்போதும்போல பொதுமக்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு வருவோர் சுமார் 3 நாள்கள் வரை மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்பு அல்லது அறிகுறிகள் இருப்பதாக இதுவரை யாருக்கும் பரிசோதனைகளில் கண்டறியப்படவில்லை என்றார்.