தருமபுரி

அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பினர் பேரணி

27th Aug 2019 10:46 AM

ADVERTISEMENT

 நல வாரிய பதிவு அட்டையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட நல வாரிய கட்டுமானம்,  அமைப்பு சாரா தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில், திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.
தருமபுரி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலிருந்து தொடங்கிய இப் பேரணி,  பாரதிபுரம்,  இலக்கியம்பட்டி,  செந்தில்நகர் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  அருகேயுள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகம் வரை சென்றது. அங்கு கோரிக்கை மனு கூட்டமைப்பு சார்பில்
வழங்கப்பட்டது.
இதில், நல வாரியத்தில் பதிவு செய்ததற்கான அட்டையை தாமதமின்றி வழங்க வேண்டும்.  கல்வி உதவித் தொகை,  திருமண உதவித் தொகை,  ஓய்வூதியம் உள்ளிட்ட  உதவிகளை வழங்கக் கோரி  அளிக்கப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நலப் பயன்கள் வழங்குவதில் தாமதிக்கக் கூடாது. நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ள கேட்பு மனுக்கள் மீது தீர்வு காணவேண்டும். ஓய்வூதிய உத்தரவு நகல்,  பயனாளிக்கு வழங்குவது போல, பரிந்துரை செய் சங்கத்திற்கும் வழங்க வேண்டும். தொழிற்சங்கத் தலைவர், செயலர் ஆகியோரை மாதந்தோறும் அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சுதர்சனன்,  செயலர் கோவிந்தராஜ், பொருளாளர் அ.முருகேசன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT