மொரப்பூரில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை (ஆக. 19) நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் துணை அஞ்சல் நிலையத்தில் ஆகஸ்ட் 19 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம், விரல் ரேகைகள் பதிவு செய்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆதார் அட்டைகளைப் பதிவு செய்தல், திருத்தம் செய்வதற்காக மத்திய அரசால் அஞ்சல் துறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அஞ்சல் துறையில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அதில் உள்ள பிழைகளை திருத்தம் செய்தல், தொலைபேசி எண்களை மாற்றுதல், மின்னஞ்சல் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவைகளை திருத்தம் செய்ய உரிய ஆவணங்களை சமர்பித்து திருத்தம் செய்யலாம். ஆதார் அட்டை திருத்தம் செய்வதற்கான கட்டணம் ரூ. 50-யை செலுத்த வேண்டும். இதேபோல், புதிதாக ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணியும் நடைபெறும். 5-வயதுக்குள்பட்ட சிறுவர்களுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்தால், சம்பந்தப்பட்டவரின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டையுடன் நேரில் வர வேண்டும். மேலும், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகளில் ஆதார் புகைப்படம் எடுப்பதற்கான சிறப்பு முகாம்களை நடத்த கோரினால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வளாகத்தில் அஞ்சல் துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்படும். மேலும், இதுகுறித்த விவரம் அறிய 04342-260932 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.