தருமபுரி

தலைமையாசிரியர்களுக்கு போக்ஸோ சட்ட விழிப்புணர்வு

18th Aug 2019 05:18 AM

ADVERTISEMENT


தருமபுரியில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கு நடைபெற்றது. 
பள்ளிக் கல்வித் துறை, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற பயிலரங்கிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி தலைமை வகித்தார்.   
குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.பி.செந்தில்ராஜா முன்னிலை வகித்தார்.
இதில் தருமபுரி மகளிர் விரைவு அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.பரமராஜ் பேசியது: பள்ளியில் பாலியல் தொந்தரவுகள் நிகழ்ந்தால் காவல் துறை, குழந்தைகள் நல அலுவலர்களுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். கடமையை செய்யாமல், அதை மறைக்கக் கூடாது. போக்ஸோ சட்டத்தில் குற்றவாளிக்கு ஏழு ஆண்டு தண்டனை எனில், அக்குற்றத்தை மறைப்பவர்களுக்கு, மூன்றரை ஆண்டு தண்டனை கிடைக்கும். 
இதேபோல பொய் காரணங்களுக்கு போக்ஸோவை பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் குழந்தைகளை அன்போடு அணுக வேண்டுமே தவிர, உடல் ரீதியாகவோ, பிற வகைகளிலோ அவர்களை தொந்தவு செய்யக் கூடாது என்றார். 
கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜி.ரகோத்தமன் பேசியது: மும்பை, பெங்களூரு, லக்னெள போன்ற இடங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் அதிகம் நிகழ்கிறது. இதேபோல, தமிழகத்தில், 2017-இல் 1,857, 2018-இல் 2,057 போக்ஸோ வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதத்தில், தருமபுரியில் 28, சேலத்தில் 30, கிருஷ்ணகிரியில் 7 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருப்பதில்லை. அதனால் தவறான ஆள்கள் அன்பாக பேசுவதால், அதை குழந்தைகள் நம்பும் நிலை உள்ளது. பெற்றோர்கள், குழந்தைகளை புரிந்து நடந்துகொள்வது அவசியமாகும் என்றார்.
மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் எம்.சிவகாந்தி, சமூக நலஅலுவலர் பி.கே.கீதா, மனநல மருத்துவர் ஆர். கற்பகம், குழந்தைகள் நல குழுமத் தலைவர் சரவணன், 120 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT