தருமபுரி

டி.அம்மாபேட்டை-ஆண்டியூர் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

11th Aug 2019 03:35 AM

ADVERTISEMENT


 டி.அம்மாபேட்டை முதல் ஆண்டியூர் வரையிலான தார்ச் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அரூர் வட்டம், டி.அம்மாபேட்டை-ஆண்டியூர் செல்லும் தார்ச் சாலையானது சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். இந்த சாலையானது திருவண்ணாமலை மாவட்டம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களை இணைக்கும் இணைப்புச் சாலையாக உள்ளது. 
சாலையை டி.அம்மாபேட்டை, நீப்பத்துறை, வேடகட்டமடுவு, தாம்பல், மொண்டுகுழி, முல்லைவனம், டி.ஆண்டியூர், தீர்த்தமலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இதேபோல், அரூர்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் இருந்து செங்கம், சிங்காரப்பேட்டை பகுதிகளுக்கு மிக குறைந்த தூரத்தில் பயணம் செய்வதற்கு டி.அம்மாபேட்டை-ஆண்டியூர் இணைப்புச் சாலையானது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்த சாலையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில், டி.அம்மாபேட்டை ஸ்ரீ சென்னியம்மன் திருக்கோயில்களும் உள்ளன. இந்த கோயில்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதேபோல், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள், லாரிகள், கார், இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் வந்துச் செல்கின்றன.
 இந்த நிலையில், டி.அம்மாபேட்டை-ஆண்டியூர் சாலையானது ஒருவழிப்பாதையாக, மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. இதனால், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரும் போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். 
இதேபோல், இந்த தார்ச் சாலையானது மேடு பள்ளங்களுடன் மிகவும் ஆபத்தான வகையில் உள்ளது. எனவே, டி.அம்மாபேட்டை முதல் ஆண்டியூர் வரையிலான தார்ச் சாலையை இரு வழிச் சாலையாக மாற்றம் செய்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT