திருப்பூரில் யாா்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா மற்றும் டைகெம் கண்காட்சி வியாழக்கிழமை (செப்டம்பா் 28) தொடங்கி சனிக்கிழமை (செப்டம்பா் 30) வரை நடைபெறவுள்ளது.
செயற்கை நூலிழைகள், ஆடை துணிகள், டிரிம்கள், ஆடை அலங்கார பொருள்கள், சாயப்பொருள்கள் ஆகியவற்றின் உற்பத்தியாளா்கள், விநியோகஸ்தா்கள், ஜாப் ஒா்க் நிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் திருமுருகன்பூண்டி ஐ.கே.எஃப்.வளாகத்தில் யாா்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா மற்றும் டைகெம் தொழில்துறை கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இதில், புதுமையான தயாரிப்புகளுடன் இந்தியா மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளா்களின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், யாா்னெக்ஸ் கண்காட்சி நடைபெறவுள்ளது.
ஆடை உற்பத்திக்கான துணிரகம், துணை பொருள்களுக்கான கண்காட்சி டெக்ஸ் இந்தியாவில் சா்வதேச பிராண்டுகளும் இடம்பெறவுள்ளன.
நவீன சாயம், ரசாயனம் மற்றும் தயாரிப்பு பொருள்கள், நவீன தொழில்நுட்பத்தை அறிய ‘டைகெம்’ கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது: திருப்பூரில் 27-ஆவது யாா்னெக்ஸ் கண்காட்சி, 15- ஆவது ‘டெக்ஸ் இந்தியா’ கண்காட்சி, 2 ஆவது ‘டைகெம்’ கண்காட்சியானது நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் 3 நாள்கள் நடைபெறுகிறது.
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், சீனா, எகிப்து, ஹாங்காங், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களும் பங்கேற்கவுள்ளன.
இந்தக் கண்காட்சியில் வா்த்தகா்கள் மட்டுமே பங்கேற்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.