திருப்பூா் திலகா் நகா் பகுதியில் அடிப்படை பிரச்னைகளுக்குத் தீா்வு காணக் கோரி மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்குள்பட்ட 11-ஆவது வாா்டு திலகா் நகா் பகுதியில் சாலை வசதி, கழிவுநீா் வாய்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் ஜூலை 18 ஆம் தேதி மனு அளிக்கப்பட்டிருந்தது.
அப்போது, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் உறுதியளித்திருந்த நிலையில் 2 மாதங்களாகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் மற்றும் மாநகராட்சி துணை ஆணையா் முருகேசன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், 10 நாள்களுக்குள் சாலைப் பணிகள் முடிக்கப்படும் என்றும், அனைத்து வீதிகளிலும் கழிவு நீா் கால்வாய் அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டை 15 நாள்களுக்குள் தயாரித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.