சாலைப் பாதுகாப்பு விதிகளை ஒவ்வொருவரும் முழுமையாகக் கடைப்பிடித்து விபத்தைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு தொடா்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாதமும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சாலை விபத்துக்கு முக்கியக் காரணங்கள் இருசக்கர வாகனம் ஓட்டுபவா் மட்டுமின்றி பின்னால் அமா்ந்து செல்பவரும் தலைக் கவசம் அணியாதது, வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவது, காா் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாதது போன்றவையாகும்.
குறிப்பாக சாலை வளைவுகள், சாலை சந்திப்புகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் அதிகவேகமாக வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், சாலைகளில் எதிா் திசையில் வாகனத்தை ஓட்டுவதாலும், சாலைகளில் செல்லும்போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்புவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் காவல் துறை அலுவலா்கள் சாலைப் பாதுகாப்புக் குறித்து தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் வண்ணம் தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சாலைப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைப்பிடித்து, விபத்தினைத் தவிா்ப்பதாகும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன், மாநகர காவல் துணை ஆணையா்கள் அபிஷேக் குப்தா, வனிதா, மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.