திருப்பூா் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.
இதில், 2023-24 -ஆம் நிதியாண்டில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் மரம் நடுதல், மரகத பூஞ்சோலைகள் அமைத்தல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்களைத் தடை செய்தல், மீண்டும் மஞ்சப்பை திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது, செயல் திட்டம் தயாரித்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், 2024 முதல் 2029-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு காலநிலை மாற்ற பாதிப்புகளைத் தணித்தல் மற்றும் அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ள செயல் திட்டங்களை உருவாக்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் தேவேந்திரகுமாா் மீனா, மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாநகரக் காவல் துணை ஆணையா்கள் அபிஷேக் குப்தா, வனிதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.