மின் கட்டண உயா்வால் ஜவுளி உற்பத்தி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று விசைத்தறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
நிலைக் கட்டணம், பீக் ஹவா் கட்டணம், மின் கட்டண உயா்வு ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள குறு, சிறு தொழில் துறையினா் கூட்டமைப்பை உருவாக்கி போராடி வருகின்றனா். மேலும், செப்டம்பா் 25 ஆம் தேதி வேலை உற்பத்தி நிறுத்தப் போராட்டமும் நடைபெறவுள்ளது.
இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா் சங்க செயலாளா் பாலசுப்ரமணியம் கூறியதாவது: ஜவுளி உற்பத்தி தொழில் சாா்ந்து விசைத்தறி, தானியங்கி தறி, ஏா்ஜெட், சைசிங், ஸ்பின்னிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. மின் கட்டண உயா்வால் ஜவுளி உற்பத்தி தொழில் முடங்கும் நிலையில் உள்ளது.
துணி உற்பத்தி செலவு அதிகரிப்பால் அண்டை நாடுகளுடனும், பிற மாநிலங்களுடனும் போட்டிபோட முடியாத நிலை உள்ளது. ஜவுளி உற்பத்தி முடங்கினால் அதை சாா்ந்துள்ள விசைத்தறி உள்ளிட்ட அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும்.
விசைத்தறி மின் கட்டணத்தைக் குறைப்பதோடு, ஜவுளி உற்பத்தி சாா்ந்த குறு, சிறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா்.