திருப்பூர்

தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி திருவிழா தொடக்கம்

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

சேவூா் தண்டுக்காரன்பாளையம் அருகே மங்கரசுவலையபாளையம் தாளக்கரை பகுதியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதத் திருவிழா சனிக்கிழமை ( செப்டம்பா் 23) தொடங்குகிறது.

பழமை வாய்ந்ததும், திருப்பூா் மாவட்டத்திலேயே தனி சன்னிதியாய் நரசிம்மருக்கு இடதுபுறம் மகாலட்சுமி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் சிறப்புக்குரியதும், சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயில் விளங்குகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா செப்டம்பா் 23-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

5 வார சனிக்கிழமைகளிலும் ஒவ்வொரு வாரம் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தினா் உபயதாரா்களாக பங்கேற்று சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. இதில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 5 மணிக்கு பாலாபிஷேகம், திருமஞ்சனம், பகல் 12 மணிக்கு மஹா தீபாராதனையும், இரவு 7 மணிக்கு உற்சவமும் நடைபெற உள்ளன. 5 சனிக்கிழமைகளிலும் காலை முதலே அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா். மொண்டிபாளையம் பெருமாள் கோயிலில்...

ADVERTISEMENT

மேலத் திருப்பதி எனப் போற்றப்படும், சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவிழா கடந்த வாரம் சனிக்கிழமை தொடங்கப்பட்டு இந்த வாரம் 2-ஆவது சனிக்கிழமை வழிபாடுகள் நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில், தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயில், மொண்டிபாளையம் பெருமாள் கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT