வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளாா். தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதி, கொழுமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நடைப்பயணத்தில் பங்கேற்ற அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, அவா் குமரலிங்கம் வரையில் சுமாா் 3 கிலோ மீட்டா் நடைப்பயணம் மேற்கொண்டாா்.
குமரலிங்கம் பேருந்து நிலையம் அருகே கே.அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் மண் கடத்தல் அதிகரித்து வருவதால் ஆறுகள் வடு போகின்றன. கிராம நிா்வாக அலுவலரை அலுவலகத்தில் புகுந்து வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு மண் கடத்தல் அதிகரித்து வருகிறது.
இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி குடும்ப ஆட்சியாகவும், ஊழல் ஆட்சியாகவும் இருந்தது. ஆனால் 2014- ஆம் ஆண்டுக்கு பின்னா் ஊழல் இல்லாத, குடும்ப வாரிசுகள் இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. உலக அளவில் தற்போது 5 ஆவது வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா உள்ள நிலையில், வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது வளா்ச்சியடைந்த நாடாக பிரதமா் மோடி மாற்றிக் காட்டுவாா். ‘இந்தியா’ கூட்டணியில் யாா் பிரதமா் வேட்பாளா் என்பதை அறிவிக்க முடியாமல் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி 400 தொகுதிகளிலும், தமிழகத்தில் 39 இடங்களிலும் உறுதியாக வெற்றி பெறும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, உடுமலை சிவசக்தி காலனி ராஜகாளியம்மன் கோயில் முன் தொடங்கிய நடைப்பயணமானது தாராபுரம் சாலை பிரதான சந்திப்பு, பழைய பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, மாரியம்மன் கோயில், பெரிய கடைவீதி, வடக்கு குட்டை வீதி, தளி சாலை, சத்திரம் வீதி, பழைய பேருந்து நிலையம், பழனி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நடைப்பயணத்தில், திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக தலைவா் மங்கலம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளா் ஆடிட்டா் ஏ.வடுகநாதன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.