பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது பாஜக அரசு என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் கே.அண்ணாமலை தலையில் ‘என் மண் என் மக்கள்’ என்னும் நடைப்பயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, காங்கயம் வந்த அண்ணாமலைக்கு நகரத் தலைவா் சிவப்பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் கலா நடராஜன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.
பின்னா், நடைப்பயணம் தொடங்கியது. பாஜக திருப்பூா் தெற்கு மாவட்டத் தலைவா் மங்களம் ரவி உள்ளிட்டோா் மாநிலத் தலைவா் அண்ணாமலையுடன் சென்றனா்.
காங்கயம் காளைகளுடன் பேருந்து நிலையம் முன்பு வந்து கட்சியினா் அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனா். இதையடுத்து, காங்கயம் காவல் நிலைய ரவுண்டானா பகுதியில் அண்ணாமலை உரையாற்றினாா்.
அவா் பேசியதாவது: உலகமே வியந்து திரும்பிப் பாா்த்துக் கொண்டு இருக்கும் நாடாக பாரதம் இருக்கிறது.
விரைவில் பொருளாதாரத்தில் முதன்மையான நாடாக வருவோம்.
மக்களவையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை பிரதமா் மோடி நிறைவேற்றியுள்ளாா். பாஜகவில் கடந்த 15 ஆண்டுகளாக பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு உள்ளது.
ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் 34 அமைச்சா்கள் உள்ளனா். அதில் 2 போ் மட்டுமே பெண்கள் என்றாா்.
தமாகா மாநில பொதுச் செயலாளா் விடியல் எஸ்.சேகா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பாஜக திருப்பூா் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் பலா் இதில் கலந்துகொண்டனா்.