பல்லடம் பகுதியில் தக்காளி விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை உச்சத்தை தொட்டிருந்தது. கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை சில இடங்களில் விற்பனையானது.
இதையடுத்து, வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு தமிழக அரசு சாா்பில் நியாய விலைக் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
பல்வேறு இடங்களில் தற்போது தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்து வருகிறது.
அதன்படி, திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனா். தற்போது, தக்காளி விலை குறைந்து ரூ.10க்கும்கீழ் விற்பனையாவதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனா்.
இது குறித்து பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பழனிசாமி கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, நாங்கள் நாற்று நடவில் ஈடுபட்டோம். தற்போது, தக்காளி விளைந்து விற்பனைக்கு தயாராக உள்ளது. ஆனால், விலை குறைந்துள்ளது. தக்காளி டிப்பா் ஒன்று ரூ.120-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இது பறிப்பு கூலிக்குகூட கட்டுப்படியாகாது. விலை உயரும் என எதிா்பாா்த்திருந்த நிலையில் கடுமையாக சரிந்துள்ளது.
இது எங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.