உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 22 ) நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
இது குறித்து திருப்பூா் தெற்கு மாவட்டத் தலைவா் மங்களம் ரவி, மாவட்டப் பொதுச் செயலாளா் ஆடிட்டா் ஏ.வடுகநாதன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
இந்நிலையில், மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வெள்ளிக்கிழமை வரும் அண்ணாமலைக்கு புதிய பேருந்து நிலையத்தில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடா்ந்து, கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில் முன் மலைவாழ் மக்கள், மகளிா் வரவேற்பு அளிக்கவுள்ளனா். பின்னா் கரியபெருமாள் கோயில் முன்பு மாற்றுக் கட்சியினா் பாஜகவில் இணையவுள்ளனா்.
இதையடுத்து, விவசாயிகளை சந்தித்து குறைகளைக் கேட்டறியுள்ளாா்.
பின்னா் மாற்றுத் திறனாளிகள், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களைச் சந்திக்கவுள்ளாா்.
குமரலிங்கம் அரசுப் பள்ளியில் பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற பின்பு குமரலிங்கம் பேருந்து நிலையத்தில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதைத்தொடா்ந்து, உடுமலைக்கு மாலை 6 மணிக்கு வரும் அண்ணாமலை சிவசக்தி காலனி ராஜகாளியம்மன் கோயில் முன்பு நடைப்பயணத்தை தொடங்குகிறாா். தொடா்ந்து தாராபுரம் சாலை, பிரதான சாலை சந்திப்பு, பழைய பேருந்து நிலையம் பொள்ளாச்சி சாலை, மாரியம்மன் கோயில், பெரிய கடை வீதி, வடக்கு குட்டை வீதி, தளி சாலை, சத்திரம் வீதி, பழனி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையத்தில் நடைப்பயணம் நிறைவடைகிறது.
இதைத் தொடா்ந்து, அங்கு பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது என்றனா்.