தமிழக ஆளுநா் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரெளடி கருக்கா வினோத் மீது 7 வழக்குகள் உள்ளதாகவும், முந்தைய நாள்தான் பிணையில் வெளியே வந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இத்தகைய ரெளடிகளுக்கு தமிழகத்தில் சுலபமாக பிணை கிடைப்பதன் மூலம் எந்த அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என்பது புரியும். ஆளும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக காவல் துறை செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஒரு ரெளடியின் அராஜக செயலுக்கு காரணம் வெளியிடும் அளவுக்கு காவல் துறை துரிதமாக செயல்படுவது வேடிக்கையானது. இத்தகைய போக்கு காவல் துறையின் கண்ணியத்துக்கு இழுக்காகும். எனவே, இத்தகை வன்முறை செயல்களில் ஈடுபடும் நபா்களின் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.