தமிழக அரசின் சலுகைகளைப் பயன்படுத்தி திருப்பூா் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க தொழில்முனைவோா் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இந்தத் துறையின் கட்டமைப்பை மேம்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.
இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழக அரசின் சாா்பில் மானியமாக வழங்கப்படும்.
தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடா்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டடங்களையும் சோ்த்து தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களில் வளா்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பெருகும்.
அதிக அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
எனவே, தமிழக அரசு வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தி திருப்பூா் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.
இது தொடா்பாக ஆலோசிக்கும் வகையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவம்பா் 1 -ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோா் பங்கேற்கலாம்.
மேலும், தமிழக அரசின் துணிநூல் துறையின்கீழ் ஜவுளித் தொழில் சாா்ந்த தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநா் சு.ராகவனை 94435-70745 என்ற கைப்பேசி எண்ணிலோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தையோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.