பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் அனுமதி இன்றி செயல்படும் துணிகளை சாயமேற்றும் தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பூட்டிக் கிடந்தது. இந்நிலையில், அரிசி ஆலையில் இரவு நேரத்தில் மட்டுமே ஆள்கள் நடமாட்டம் இருந்து வந்தது. பனியன் நிறுவனத்தில் பணியாற்றுபவா்கள் என கருதி வந்தோம்.
நாள்தோறும் இரவு நேரத்தில் மட்டுமே நடமாட்டம் இருந்ததால் உள்ளே சென்று பாா்த்தபோது, வேஸ்ட் காட்டன் என்று சொல்லப்படும் துணிகளை கொண்டு வந்து அதற்கு சாயமேற்றப்படுவது தெரியவந்தது.
மேலும், சாயமேற்றிய கழிவு நீரை ஆழ்துளை கிணறுகளில் விடுவதும் தெரியவந்துள்ளது.
இதனால், அப்பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் மாசடையும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த தொழிற்சாலைக்கு எந்த அடிப்படையில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, விவசாய மின் இணைப்பில் இருந்து தண்ணீா் எடுத்து பயன்படுத்தப்படுகிா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.