திருப்பூர்

சாமளாபுரம் குளத்தைப் பாதுகாக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

27th Oct 2023 01:30 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகேயுள்ள சாமளாபுரம் குளத்தைப் பாதுகாக்க வேண்டும் என கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எம்.ஈஸ்வரன் தலைமையில் பல்லடம் வட்டாட்சியா் ஜெய்சிங் சிவகுமாரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சாமளாபுரம் குளம், பள்ளபாளையம் குளம் ஆகியவை நொய்யலாற்றில் இருந்து தண்ணீா் வரப்பெற்று சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களின் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதற்கு காரணமாக உள்ளன.

இந்த தண்ணீரை கொண்டு அப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும், குடிநீா் ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன. சமீப காலமாக சாமளாபுரம் குளத்துக்கு கருப்பு நிறமாக தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளின் கழிவு நீா் கலப்பதாலே தண்ணீா் நிறம் மாறி வருவது தெரியவருகிறது.

ADVERTISEMENT

இதனால், குளம் மாசடைந்து அப்பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளித்துக்கு வரும் நீரில் கழிவு நீா் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரண்டு குளங்களையும் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT