காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
காங்கயம் அருகே, கீரனூா்-செல்லப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கமுத்து (60), விவசாயி. இவா் மாட்டுத் தீவனம் வாங்குவதற்காக காங்கயத்துக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை வந்துள்ளாா். பின்னா், தீவனத்தை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளாா்.
சிவன்மலை அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் தங்கமுத்துவின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த தங்கமுத்துவை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான காா்த்திஷ்குமாா் (29) என்பவா் மீது காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.