வெள்ளக்கோவிலில் சாலையோரம் கழிவுகளைக் கொட்டிய இறைச்சிக் கடைக்கு நகராட்சி ஆதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
வெள்ளக்கோவில், தாராபுரம் சாலையிலுள்ள தீத்தாம்பாளையத்தில் வெட்டுக்காடு பிரிவு அருகே செயல்பட்டு வரும் கோழி இறைச்சிக் கடை, இறைச்சிக் கழிவுகளை கடைக்கு அருகிலுள்ள சாலையோரத்தில் கொட்டியுள்ளனா். அப்போது சாலையோரத்தில் இறைச்சிக் கழிவுகளை கொட்டிய வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் ஆகியோா் சாலையோரத்தில் கொட்டப்பட்ட இறைச்சிக் கழிவுகளை ஆய்வு செய்தனா். பின்னா், பொசு சுகாதாரத்துக்கு கேடு விளைக்கும் வகையில் செயல்பட்ட இறைச்சிக் கடைக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் சீல் வைக்கப்பட்டது.
பொது சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகளை கொட்டினால் சம்பந்தப்பட்ட கடை, நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என் நகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.