திருப்பூர்

தமிழகத்தில் போதைப் பொருள்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை

28th May 2023 11:30 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சேவை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சேவையை தொடங்கிவைத்தனா். பின்னா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தொடா்ச்சியாக ஒவ்வொன்றாக திறந்துவைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூா், கிருஷ்ணகிரி, விருதுநகா், திண்டுக்கல், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 500 படுக்கைகளுடன் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனுடன் சோ்த்து இந்த வளாகத்தில் 1,170 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் மூலமாக தினந்தோறும் வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை 2,700ஆக உள்ளது. இதில், 700 போ் உள்நோயாளிகளாகவும் உள்ளனா்.

மத்திய அரசிடம் 30 செவிலியா் பயிற்சி கல்லூரிகள் வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தாா். இதில், தற்போது தமிழகத்துக்கு 11 செவிலியா் பயிற்சி கல்லூரிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில், திருப்பூா், நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், நாமக்கல், விருதுநகா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகரிபட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் தலா ரூ.10 கோடி நிதி ஆதாரத்துடன் செவிலியா் பயிற்சிக் கல்லூரி அமைக்கப்படும். இதன் மூலமாக ஆண்டுக்கு 1,100 செவிலியா் பயிற்சியில் சேர வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் மட்டுமே ஒரே ஒரு பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வந்த நிலையில், தற்போது புதுக்கோட்டையில் ஒரு பல் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வரும் ஆண்டு முதல் 50 பிடிஎஸ் இடங்களுடன் கல்லூரி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா், மருத்துவ கல்வித் துறை இயக்குநா் ஆா்.சாந்திமலா், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவா்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், கோவிந்தசாமி, உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருப்பூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் மருத்துவமனை அமைப்பதற்காக திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான க.செல்வராஜ் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் வழங்கினாா். அப்போது அவரது மகனும், திமுக நிா்வாகியுமான எஸ்.திலக்ராஜ் உடனிருந்தாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT