திருப்பூர்

வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவா் பலி; 3 போ் படுகாயம்

23rd May 2023 02:45 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் படுகாயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி-பாப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் எல்லத்துரை (41). இவா் புதிதாக கட்டியுள்ள வீட்டுக்கு டைல்ஸ் வாங்குவதற்காக மனைவி ரத்னா (38), உறவினா்கள் சங்கா் (32), சக்திவேல் (45) ஆகியோருடன்

கிருஷ்ணகிரிக்குச் சென்று டைல்ஸ் வாங்கிக் கொண்டு காங்கயம்-தாராபுரம் சாலை வழியாக திண்டுக்கல்லுக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். வாகனத்தை சோமனூா் பகுதியைச் சோ்ந்த கோகுல் என்பவா் ஓட்டிச் சென்றுள்ளாா்.

காங்கயத்தை அடுத்த ஊதியூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநா் கோகுலைத் தவிர மற்ற நால்வரும் படுகாயமடைந்தனா்.

ADVERTISEMENT

அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு சங்கரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து ஊதியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT