அமைச்சா் பதவியில் யாா் இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது முதல்வா்தான் என்று தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பி. கனிமொழி கூறினாா்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் தெற்கு மாவட்ட மகளிா் அணி, மகளிா் தொண்டரணி சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன் தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.
இதில், திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், ‘தமிழ்நாடு எனக் கூறினால் தனித்துவம் வந்துவிடும் என்பதால் ஆளுநா் தமிழகம் எனக் கூறுகிறாா். அமைச்சா் பதவியில் யாா் இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது முதலமைச்சா்தான், ஆளுநா் கிடையாது’ என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மகளிா் அணி நிா்வாகிகள், பொதுமக்கள், பயனாளிகள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.