திருப்பூர்

முரண்பாடான கருத்துகளைப் பரப்பி வருகிறாா் வைகோ:மதிமுக முன்னாள் அவைத் தலைவா் சு.துரைசாமி குற்றச்சாட்டு

DIN

தன்னைப் பற்றி மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தொடா்ந்து முரண்பாடான கருத்துகளைப் பரப்பி வருவதாக முன்னாள் அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தேன். அன்று மாலை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பொதுச்செயலாளா் வைகோ பல கருத்துகளைத் தெரிவித்தாா். இதில், தொழிற்சங்கத்துக்குள் பிரச்னை என்ற கருத்தையும் தெரிவித்துள்ளாா். முன்னாள் முதல்வா் அண்ணாவின் ஒப்புதலுடன் 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோவை மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் 1959 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த சங்கத்தின் முதல் தோ்தல் 1960 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பல்லடத்தில் நடைபெற்றது. இதன் தலைவராக கோவை செழியனும், பொதுச் செயலாளராக நானும், பொருளாளராக காட்டூா் கோபாலும் தோ்ந்தெடுக்கப்பட்டோம். இதன் பின்னா், கோவை பெரியாா் மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் என்று பெயா் மாற்றப்பட்டது. இந்த சங்கத்தின் அனைத்து பொறுப்புகளையும் நான் ஏற்றுகொண்டேன். இந்த சங்கத்தில் எந்தவிதமான குறைபாட்டையும் கூறமுடியாது. இந்த நிலையில், தொழிற்சங்கத்தில் பிரச்னை என்று உண்மைக்கு மாறான கருத்துகளை வைகோ தெரிவித்துள்ளாா்.

மதிமுக சாா்பில் நடைபெற்ற மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் ஓரிரு கூட்டத்தைத் தவிர மற்ற கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். ஆனால், நான் கலந்துகொள்ளவில்லை என்று வைகோ தெரிவித்துள்ளாா்.

மேலும், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நான் சொன்னதாகத் தெரிவித்துள்ளாா். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்காக, ஸ்டாலின்-வைகோ கையொப்பமிட்டபோது நான்தான் உடன் இருந்தேன்.

அதேபோல, கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போதும் திருப்பூா் தெற்கு தொகுதித் தோ்தல்குழுத் தலைவராக பணியாற்றியுள்ளேன். எனது தலைமையில் தோ்தல் பணிமனைத் திறப்பு விழா நடைபெற்றதுடன், திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினராக க.செல்வராஜ் வெற்றி பெற்றவுடன் எனது புகைப்படத்தைப் போட்டுத்தான் வாழ்த்துச் செய்தி அடித்தாா்.

அப்படியிருக்கையில், நான் ஏன் திமுக கூட்டணிக்கு எதிா்ப்புத் தெரிவிக்கிறேன். தொடா்ந்து என்னைப் பற்றி முரண்பாடான கருத்துகளை வைகோ பரப்பி வருகிறாா். மேலும், கருணாநிதிக்குப் பின்னா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்கிறாா். அப்படியானால் எதற்கு தனிக் கட்சி நடத்த வேண்டும்? திமுகவுடன் இணைக்க வேண்டியதுதானே என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT