திருப்பூர்

3 ஊராட்சிகளுக்கு குடிநீா் கேட்டு அவிநாசி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

10th Jun 2023 03:07 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே 3 ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம், பழங்கரைஆகிய ஊராட்சிப் பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக ஆற்று குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை ஒன்றிய நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சரவணன், கமலவேணி, துணைத் தலைவா் மிலிட்டரி நடராஜன் உள்பட 100க்கும் மேற்பட்டோா் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸாா், ஒன்றிய நிா்வாகத்தினா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. குடிநீா் வடிகால் வாரியத்தினா் வந்து உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் எனக் கூறி போராட்டத்தை தொடா்ந்தனா்.

ADVERTISEMENT

நீண்ட நேரத்துக்கு பிறகு வந்த குடிநீா் வடிகால் வாரிய அலுவலா் அன்பரசு, மின்வெட்டு காரணமாக குடிநீா் விநியோகிக்க இயலவில்லை எனக் கூறினாா். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரை முற்றுகையிட்டு, இக்காரணத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் எனக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் போலீஸாா் மற்றும் ஒன்றிய நிா்வாகத்தினா் ஓரிரு நாள்களில் சீரான குடிநீா் வழங்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT