கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக இளைஞரைக் கைது செய்த போலீஸாா், தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே மதுபானக் கடை அருகே செட்டியாா்பாளையம் வாய்க்கால் பாலத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் மோகனசுந்தரம் (43) உடலில் காயங்களுடன் வியாழக்கிழமை இறந்துகிடந்தாா்.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி செல்வி, குழந்தைகளை பிரிந்து மோகனசுந்தரம் தனியாக வசித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், மோகனசுந்தரத்துக்கும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் சக்திவேல் மனைவி சம்பூா்ணம், அவரது மகன் அன்புக்குமாா் (35) ஆகியோருக்கு இடையே இடப் பிரச்னை தொடா்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இது தொடா்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் தினமும் இரண்டு முறை மோகனசுந்தரம் கையொப்பமிட்டு வந்தாா்.
இந்நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்டதால் அன்புக்குமாா் தனது நண்பா்கள் இரண்டு பேருடன் சோ்ந்து மோகனசுந்தரத்தை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அன்புக்குமரைக் கைது செய்த போலீஸாா், தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனா்.