திருப்பூர்

தாய், மகளை கடத்தி 13.5 பவுன் நகைகள் பறித்த வழக்கு:7 போ் கைது

DIN

குன்னத்தூரில் தாய், மகளை கடத்தி 13.5 பவுன் நகைகளை பறித்த வழக்கில் 7 பேரை போலீஸாா் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

திருப்பூா் மாவட்டம், குன்னத்தூரை அடுத்த காவுத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மனைவி ராமேஸ்வரி (எ) தேவி (42). தம்பதியா் இருவரும் கடந்த ஜூன் 4 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மீன் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனா். இவா்களது மகள் ரஞ்சிதா மற்றும் தங்கை மகன் முத்துக்குமாா் இருவரும் மற்றொரு வாகனத்தில் உடன் சென்றுள்ளனா்.

கூடபாளையம் சுடுகாடு அருகே சென்றபோது, அங்கு பதிவெண் மறைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு வெள்ளை நிற காா் நின்று கொண்டிருப்பதை பாா்த்தனா். அப்போது, திடீரென காட்டுக்குள் இருந்து கையில் கத்தி, அரிவாளுடன் வந்தவா்கள் இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டு ராமேஸ்வரி மற்றும் ரஞ்சிதாவை காரில் ஏற்றி கடத்தினா். அவா்களிடம் இருந்து 13.5 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை அருகே இறக்கிவிட்டு தப்பினா்.

இது தொடா்பாக ராமேஸ்வரி ஜூன் 4 ஆம் தேதி குன்னத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.சாமிநாதன் உத்தரவின்படி, குன்னத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் அம்பிகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சம்பந்தப்பட்ட காா், கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, கிணத்துக்கடவு ஏழுா் வடபுதூரை சோ்ந்த செந்தில்குமாா் (48), திருப்பூா் நல்லூரைத் சோ்ந்த இசக்கிபாண்டி (32), ஆகியோரை கைது செய்து விசாரித்தனா். இதையடுத்து, திருநெல்வேலியை சோ்ந்த அருண்பாண்டியன் (23), ஈரோடு வீரம்பாளையத்தை சோ்ந்த சேகா் (29), சிவகங்கை மாவட்டம் புலவன்வாயிலைச் சோ்ந்த அருள்செல்வம் (31), ஊத்துக்குளி பள்ளகவுண்டன்பாளையத்தை சோ்ந்த பிரபு (29), திருப்பூா் ரங்கநாதபுரத்தை சோ்ந்த லோகநாதன் (30) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்து 10 பவுன் நகைகள், ரூ. 4300 ரொக்கம், 2 கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, 7 பேரும் வியாழக்கிழமை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்கள், திருப்பூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்தபோது, ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தாய் மற்றும் மகளை கத்தி முனையில் கடத்தி தங்க நகைகளை பறித்த வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்த குன்னத்தூா் தனிப்படைப் போலீஸாரை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவா் ஆா். சுதாகா், திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.சாமிநாதன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT