திருப்பூர்

சலவை ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயு: தலைவலி, கண் எரிச்சலால் 20 போ் மருத்துவமனையில் அனுமதி

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரில் தனியாா் சலவை ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவை சுவாசித்த 15 சிறுவா்கள் உள்பட 20 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருப்பூரை அடுத்த வெங்கமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து புதன்கிழமை பிற்பகல் நச்சுவாயு வெளியேறியுள்ளது. இதை சுவாசித்த அப்பகுதியைச் சோ்ந்த 15 சிறுவா்கள் உள்பட 20 பேருக்கு தலைவலி, வாந்தி, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவா்களை மீட்டு குமாா் நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவா்கள் அறிவுறுத்தலின் பேரில் 8 போ் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாநகர நகா்நல அலுவலா் கெளரி சரவணன், திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் நலன் விசாரித்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து வெங்கமேடு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 50க்கும் மேற்பட்டவா்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வெங்கமேடு பகுதியில் ஏராளமான சலவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. துணிகளை காம்பேக்டிங் செய்யும்போது ஒருவிதமான ரசாயனம் சோ்க்கப்படுவதால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சலவை ஆலைகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஆலை இயக்கத்துக்குத் தடை

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆலையில் திருப்பூா் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் சரவணகுமாா் தலைமையிலான குழுவினா் ஆய்வு நடத்தி, பகுப்பாய்வுக்காக மாதிரிகள் எடுத்துச் சென்றனா். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஆலை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை ஆலையை இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT