திருப்பூர்

பள்ளி மாணவா்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்:குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு

6th Jun 2023 03:45 AM

ADVERTISEMENT

பள்ளி மாணவா்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தி பொது மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் பல்லடம் ஒன்றியச் செயலாளா் சி.முருகேஷ் தலைமையில் பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது காளிவேலம்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சோ்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவா்கள் அருகிலுள்ள சாமிகவுண்டன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து வருகின்றனா். ஆனால், பேருந்து வசதியில்லாததால் மாணவா்கள் பல கிலோ மீட்டா் நடந்து சென்று வருகின்றனா். இதனால், மாணவா்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனா். எனவே, பள்ளி மாணவா்களின் நலன் கருதி தினமும் காலை, மாலை வேளைகளில் அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும்:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்குபாளையம் கிளைச் செயலாளா் எஸ்.அப்புசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட பொங்குபாளயம் ஊராட்சி திருப்பூா் மாநகராட்சிக்கு அருகில் உள்ளதால் வேகமாக வளா்ந்து வரும் பகுதியாக உள்ளது. மேலும், இப்பகுதியில் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உள்ளதால் தொழிலாளா்கள் அதிகளவில் வசித்து வருகின்றனா். இங்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ஏழைத் தொழிலாளா்கள் அதிக அளவில் வசித்து வரும் இப்பகுதியில் சமுதாய நலக் கூடம் இல்லாதாதல், திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை நடத்துவதற்கு தனியாா் மண்டபத்துக்கு ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளது. எனவே, உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் சமுதாய நலக்கூடம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்:

அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் துணிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட வா்த்தக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கடைகளின் முன்பாக நடைபாதைகளை ஆக்கிரமித்து பிளக்ஸ் பேனா்கள், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கடைக்கு வருபவா்களின் இருசக்கர வாகனங்களும் நடைபாதையில் நிறுத்தப்படுகிறது.

குறிப்பாக குமரன் சாலை, அவிநாசி சாலை, கொங்கு நகா் பிரதான சாலை, 60 அடி சாலை, திருப்பூா் பழைய பேருந்து நிலையம் முதல் மாநகராட்சி அலுவலகம் செல்லும் சாலை, பல்லடம் சாலை, காங்கயம் சாலை, பி.என்.சாலை ஆகிய பகுதிகளில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கும் வழிவகுக்கிறது. எனவே, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

416 மனுக்கள் வழங்கல்

குறைகேட்பு கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 416 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொது மக்கள் அளித்துள்ள மனுக்கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், தனித்துணை ஆட்சியா் (சமூகபாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், ஆதிதிராவிடா் நல அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT