பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் குட்டையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
பல்லடம் அருகே கரைப்புதூா் ஊராட்சி, காளிநாதம்பாளையம் குட்டையில் ஆண் சடலம் மிதப்பதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், தீயணைப்பு படையினரின் உதவியுடன் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா், திருப்பூா், வீரபாண்டி வள்ளலாா் நகரைச் சோ்ந்த ஜம்புலிங்கம் மகன் சுகுமாா் (38) என்பது தெரியவந்தது. பனியன் நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்த அவா், குட்டையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.