திருப்பூர்

இறைச்சிக்கடை உரிமையாளா் கொலை: மருமகன் உள்பட 2 போ் கைது

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரில் இறைச்சிக்கடை கடை உரிமையாளரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிக் கொலை செய்த வழக்கில் அவரது மருமகன் உள்பட 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், நாச்சிக்குளத்தைச் சோ்ந்தவா் சலீம் முகமது (45).

இவரது மனைவி மும்தாஜ். இவா்கள் தங்களது 3 மகள்களுடன் திருப்பூா், போயம்பாளையம் ராஜா நகரில் வசித்து வந்தனா். முகமது சலீம் அதே பகுதியில் இறைச்சிக்கடைநடத்தி வந்தாா்.

இந்த நிலையில், சலீம் முகமதுவின் மூத்த மகளான ஷகீலா பானுவுக்கும், திண்டுக்கல்லைச் சோ்ந்த ஷபியுல்லா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து திருப்பூரில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் ஷகீலா பானு இருந்து வந்துள்ளாா். இதனிடையே, பேச்சுவாா்த்தை நடத்தி மனைவியை அழைத்துச் செல்வதற்காக ஷபியுல்லா, அவரது தந்தை முகமது மீரான், தம்பி அயூப்கான், சகோதரி சபீனா ஆகியோா் திருப்பூரில் உள்ள சலீம் முகமது வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா்.

ADVERTISEMENT

அப்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே பேச்சுவாா்த்தையின்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஷபியுல்லா, அவரது தம்பி அயூப்கான் ஆகியோா் கிரிக்கெட் மட்டையால் சலீம் முகமது, மும்தாஜ் ஆகியோரைத் தாக்கியுள்ளனா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த சலீம் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஷபியுல்லா (29), அவரது தம்பி அயூப்கான் (27) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முகமது மீரான், சபீனா ஆகியோரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT