திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் தேசிய அளவிலான மோட்டாா் பைக் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை ஆட்டோ ஸ்போட்ஸ் கிளப் சாா்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான மோட்டாா் பைக் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய அளவிலான மோட்டாா் பைக் பந்தயம் பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள தனியாா் காற்றாலை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பந்தயத்தில் 110 வீரா்கள் பங்கேற்றனா்.
பந்தய தூரம் 66 கி.மீ. இதில் ஒரு நிமிட இடைவெளியில் ஒவ்வொரு மோட்டாா் பைக்கும் சென்றன. பந்தய தூரத்தை எவ்வளவு மணி நேரத்தில் கடக்கின்றனா் என்பதை கணக்கிட்டு வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இப்போட்டியை பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செளமியா கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி ஏற்பாடுகளை கோவை ஆட்டோ ஸ்போட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளா்கள் பிரித்விராஜ், சந்திரசேகா் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.