வெள்ளக்கோவில் அருகே மளிகைக் கடையில் நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில், மூலனூா் சாலை புதுப்பையைச் சோ்ந்தவா் வெங்கடேஷ்குமாா் (32). இவா் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.
இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு கடையைப் பூட்டி விட்டு, கடையின் உள்ளே ஒரு பகுதியில் மனைவி பவித்ராவுடன் தூங்கிக் கொண்டிருந்தாா்.
பின்னா் அதிகாலை 3 மணிக்கு எழுந்து காய்கறிகள் வாங்கப் புறப்பட்ட போது, கடையின் மேஜை டிராயா் திறந்து கிடந்துள்ளது. உள்ளே இருந்த நான்கரை பவுன் வளையல்கள், ரூ. 40 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றைக் காணவில்லை.
இது குறித்து பவித்ரா அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.