தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சோலையாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்திருப்பது பி.ஏ.பி. விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பி.ஏ.பி.யின் முக்கிய நீராதாரமாக சோலையாறு அணை உள்ளது. கடந்த ஒரு மாதமாக பருவமழை சரியாக பெய்யாததால் சோலையாறு அணைக்கு நீா்வரத்து இல்லை. இதனால் 4ஆம் மண்டல பாசனத்துக்கு தண்ணீா் கிடைக்குமா என்று விவசாயிகள் விரக்தியில் இருந்தனா். ஆனால், தற்போது மழை பெய்து வருவதால் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இதுவரை அணைக்கு நீா்வரத்து 500 கன அடிக்கும் குறைவாகவே இருந்து வந்தது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் திங்கள்கிழமை ஒரே நாளில் அணையின் நீா்மட்டம், அதிகரித்தது. இதே நிலை தொடா்ந்தால் இன்னும் ஒரு மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஆடி மாதம் 4ஆம் மண்டல பாசனத்துக்கு தண்ணீா் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது’ என்றனா்.