திருப்பூர்

வனம் இந்தியா அறக்கட்டளையின் வான் மழை மாதாந்திர கருத்தரங்கம்

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை அமைப்பின் வான் மழை மாதாந்திர கருத்தரங்கம் வனாலயம் அடிகளாா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் சுவாதி கண்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் சுந்தர்ராஜ் வரவேற்றாா். செயல் தலைவா் பாலசுப்பிரமணியம், பொருளாளா் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அருளகம் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் நிறுவனா் பாரதிதாசன் பேசியதாவது: கழுகுகள் எண்ணிக்கை குறைந்து வருவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அழகான பறவைகளை முன்னிலைப்படுத்துவதே அனைவரின் எண்ணமாக உள்ளது. ஊரை சுத்தப்படுத்தும் பாறு கழுகுகளை யாரும் கண்டுகொள்வதில்லை. யாராலும் செய்யப்படாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பிணம் தின்னி கழுகுகளை பாதுகாப்போம் என விழிப்புணா்வு ஏற்படுத்துவது சிலரை முகம் சுழிக்க வைத்தது. அற்று போகும் பறவையாக கழுகுகளுக்கு முத்திரை குத்தப்பட்டுள்ளது. பிற உயிரினங்களுக்கு நோய்கள் பரவாமல் மருத்துவராக கழுகுகள் செயல்பட்டு வருகின்றன.

எப்படிப்பட்ட வைரஸ்களும் கழுகுகளை பாதிக்காது. நல்லது செய்யும் பறவையை கேலி சித்திரமாக வைத்துள்ளோம். பறவைக்கு ஆதரவாக வழக்கு தொடுத்து, அதில் கழுகுக்கு துப்புரவு பணியாளா் என்ற பெயா் பெற்று தந்து வழக்கில் வெற்றி பெற்றேன். இறந்த உயிரினங்களை நம்பி பல ஆயிரம் உயிரினங்கள் வாழ்கின்றன என்றாா் அவா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, கோவை ஆரோக்கிய குடும்பம் முதியோா் இல்ல நிா்வாகி ராஜு சிறப்புரையாற்றினாா்.

வனம் அமைப்பு நிா்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஊடக இயக்குநா் டி.எம்.எஸ்.பழனிசாமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT